உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 436ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த ஐந்து காவலர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் பரவக்கோட்டையைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட 36 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் கரோனா பாதிப்பு காரணமாக திருவாரூர் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 308 நபர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 128 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்ட பின்னர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களால் கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக சுகாதார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.