நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (31). இவர் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். ஜூன் 28ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து ரயில் மூலம் சேலத்திற்கு வந்துள்ளார். சேலத்தில் இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், நோய்த்தொற்று நேற்று மாலை உறுதியானதை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் போதிய சுகாதாரம் இல்லை என அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு தப்பியோடி உள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்குமார் இல்லாததைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் வீட்டிலிருந்த இளைஞரை சிகிச்சைக்காக அழைத்துள்ளனர். அப்போது அவர்களிடம் தான் வரமுடியாது என்றும், போதுமான சுகாதாரம் இல்லை எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ரஞ்சித் ஈடுபட்டதோடு, தகாத வார்த்தைகளால் திட்டியதால் சுகாதாரத் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும், ரஞ்சித்குமாரிடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:கரோனா அறிகுறி இருந்தும் பரிசோதனைக்காக அலைக்கழிக்கும் மருத்துவர்கள் -காணொலி வைரல்!