சென்னையில் கரோனா தொற்று வீரியம் குறைந்து காணப்பட்டாலும், அதன் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றே கூற வேண்டும். தொடர்ந்து முதல் களப் பணியாளர்கள் அதிக அளவு பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
சென்னையில் ஊரடங்கு முடிவுக்கு வந்திருந்தாலும், ரோந்துப் பணி, வாகன தணிக்கையில் ஈடுபடும் போது காவலர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பணிக்கு சேர்ந்து ஒரு வாரத்திலேயே தொற்று உறுதி செய்யப்பட்டது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மயிலாப்பூர் துணை ஆணையர், கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்து கரோனா பாதிப்புக்குள்ளான மற்ற 15 பேரும் ஐ.ஐ.டி., காவலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே துணை ஆணையர் உட்பட 16 காவலர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த காவலர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அலுவலர்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் இதுவரை 1,518 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.