திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள லட்சுமங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரின் மகன் கோகுல் விக்னேஷ் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் இன்று (ஜூலை ஆறு) கோரை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நீர்ச் சுழலில் சிக்கிய கோகுல் விக்னேஷ் நீரில் மூழ்கினார். இதனையறிந்த கோகுல் விக்னேஷின் நண்பர்கள் அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர் .
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அப்பகுதி மக்களும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் காவல் துறையினரும் இணைந்து கோகுல் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கோகுல் விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நண்பர்களுடன் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.