திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரியமங்கலம் ஏரியை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
இங்கு கடந்த சில வருடங்களாக மழை பெய்யாததால் நீர்வரத்தின்றி இந்த ஏரி வறண்டு, விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இனிவரும் பருவ மழையைத் தேக்கி வைத்து விவசாயம் செய்ய உதவக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கரியமங்கலம் ஏரியை தூர் வாரி கரையை பலப்படுத்த, சுமார் 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் ஏலம் விடப்பட்டு, அதற்கான பணிகளை அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், குடிமராமத்துப் பணிகள் முறைகேடாக நடப்பதாகவும், பெயர் அளவில் மட்டுமே அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கரியமங்கலம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை நேற்று (செப்.22) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, செங்கம் ஏரி, தோக்க வாடி ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளையும், திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பகுதிகளையும் ஆய்வு செய்தார்.