கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இதுவரை 11 ஆயிரத்து 662 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த முகாம்கள் மூலம் 13 லட்சத்து 38 ஆயிரத்து பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில், எட்டாயிரத்து 262 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாள்தோறும் 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டாயிரம் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்துவருகின்றனர். கோவையில் ஊரடங்கிற்குப் பிறகு வடமாநிலத் தொழிலாளர் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டு வேலையில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா குறித்து 300 வாகனங்கள் பரப்புரைகளில் ஈடுபடுகின்றன. மக்களின் ஆதரவு மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.