தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். மீனவரான இவர், அரசு அளித்த மானியத்தை முதலீடாக கொண்டு புதிதாக மீன்பிடி படகு ஒன்றை சமீபத்தில் கட்டினார். இந்த படகில் தருவைக்குளத்தைச் சேர்ந்த படகு ஓட்டுநர் ராபின் உள்பட திரேஸ்புரம், தருவைக்குளத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த ஜூலை 29ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, நாகப்பட்டினத்தையொட்டி ஆழ்கடல் பகுதியில் சூரை மீன்கள் அதிகளவில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அவர்கள் நாகப்பட்டினம் நோக்கி சென்றனர். அப்போது ஆழ்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகில் திடீரென பழுது ஏற்பட்டது.
இதையடுத்து படகு நீரோட்ட வழியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அவ்வழியே வந்த இரண்டு சிறிய படகில் வந்த மீனவர்கள் பழுதாகி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த படகினை இழுக்க முயற்சி செய்தனர். ஆனால் படகினை மீட்க முடியவில்லை.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தகவல் அறிந்த உறவினர்கள், சமூக ஆர்வலர் ஃபாத்திமா பாபு தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க வலியுறுத்தி நேற்று (ஆகஸ்ட் 5) கோரிக்கை மனு அளித்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்து மீனவர்களை உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் இந்திய கடலோர காவல் படையினர் சர்வதேச கடல் எல்லை அருகே ரோந்து சென்றபோது இலங்கை கடல் எல்லையை ஒட்டி தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் படகினை மீட்டு நாகப்பட்டினம் கரைக்கு கொண்டு வந்தனர்.
தற்போது படகிலுள்ள பழுது சரி செய்யப்பட்டு இரு தினங்களில் மீனவர்கள் 14 பேரும் தூத்துக்குடியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.