தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர், முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகையே அச்சுறுத்தும் கரோனா தொற்று தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர் உள்ளிட்டோர் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சித்திக் பாபு ( 34) பணியமர்த்தப்பட்டார். பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த இவர், கரோனா வார்டில் நோயாளிகளுக்கான நுழைவுச் சீட்டு வழங்கும் பணியில் இருந்துவந்தார்.
இந்நிலையில், சித்திக் பாபுவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த ஜூன் 19ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது உயிரிழந்ததால் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை விரைந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.