கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய் 5.01 கோடி செலவில் 33/11 கேவி உள்ளரங்கு துணை மின் நிலையமும், அதற்கு மின்னூட்டம் கொடுப்பதற்காக கொட்டாரம் பகுதியில் ரூபாய் 2.23 கோடி செலவில் 110/33 கேவி துணை மின் நிலையத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த மின் நிலையங்கள் மூலம் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிப் பகுதிகள், கோவளம் கிராம ஊராட்சிக்குட்பட்ட சுமார் 6 ஆயிரம் மின் நுகர்வோர்கள், மூன்று உயர் மின்னழுத்த மின் நுகர்வோர்கள், 150 சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுமார் 500 வணிக நிறுவனங்களுக்குச் சீரான மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்.பி, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், மின் வாரியத்துறை அலுவலர்கள் பங்கேற்றார்கள்.