சென்னை மதுரவாயல் கந்தசாமி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரை மாமூல் கொடுக்காத முன்விரோதத்தில் மே 22 ஆம் தேதி கோயம்பேடு பகுதியில் வைத்து ரவுடி கும்பல் மூன்று பேர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
அந்தப் பகுதி மக்கள் ஒருவரை மட்டும் பிடித்து கோயம்பேடு காவலரை்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ரவுடி தக்காளி பிரபாகரன் என்பது தெரியவந்தது. மேலும் கூட்டாளிகள் இருவர் தப்பி ஓடிய பிறகு கோயம்பேடு காவல்துறையினர் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை பிடிக்க ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ்-ஐபிஎஸ் குடியிருப்பில் ஆறு பேர் கொண்ட ரவுடி கும்பல் இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே அங்கு சென்ற காவல்துறையினர் சத்தியமூர்த்தி வழக்கில் தொடர்புடையவர்கள் என்று நினைத்து ஆறு பேர் கொண்ட கும்பல் இருவரை பிடித்தனர். ஆனால் பிடிபட்டவர்கள் ஏற்கனவே வடபழனி சேர்ந்த ரமேஷ் என்பவரை கொலை செய்தவர்கள் என்பது தெரியவந்தது.
மொத்தமாக சத்தியமூர்த்தி மற்றும் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் போது எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பதாக சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
இதனால் இவர்களது தொடர்பில் இருந்த காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இவர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.