உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியான சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்தாலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பரவல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக டிஜிபி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலரும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இதுவரை 1250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐஐடி வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பெற்றுவரும் காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களை சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மருத்துவர்களிடம் குறித்து கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இதுவரை சென்னையில் 1250 காவல்துறையினர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 250 காவல்துறையினர் இந்த வளாகத்தில் தங்கியுள்ளனர். அவர்களின் நலன் விசாரிக்க வந்தேன். அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்கள் நோயில் இருந்து மீண்டு வர வேண்டும். மேலும், அரசு அனைத்து வசதிகளையும் முறையாக செய்து இருப்பதாக தெரிவித்தார். மருத்துவ நிர்வாகத்திடம் கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
காவல்துறையினர் களத்தில் பணியாற்ற வேண்டியிருப்பதால் அவர்களை பாதுகாக்க அரசு ஒருசில வழிமுறைகளை அறிவுறித்தி உள்ளது. இதை முறையாக பின்பற்றினால் பாதிப்பை குறைக்கலாம். கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை காவல்துறை சிறப்பாக செயல்படுத்தும். காவல்துறை சார்பாக அனைத்து பகுதிகளுக்கும் விழிப்புணர்வு பரப்புரை செய்யப்படுகிறது. வாகன தணிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.