இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எஃப்.எஃப்) சார்பில் ஆண்டுதோறும் ஐ லீக் கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2018-19ஆம் ஆண்டுக்கான ஐ லீக் கால்பந்து தொடர் பட்டத்தை சென்னை சிட்டி எஃப் சி அணி முதல்முறையாக வென்றது.
இதனிடையே, 2010ஆம் ஆண்டில் இருந்து இந்தத் தொடருக்காக ஆண்டுதோறும் ரூ. 50 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த சீசனில் இருந்து, இதற்கு ஸ்பான்சர் செய்வதை நிறுத்தி விட்டது. இதனால், இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிதி நெருக்கடியில் தவித்தால், சென்னை சிட்டி எஃப்சி அணிக்கு பரிசுத் தொகை ரூ. 1 கோடி வழங்க முடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து, தங்களுக்கு பரிசுத் தொகை வழங்கக் கோரி, இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு மெயில் அனுப்பியதாக சென்னை சிட்டி அணி தலைமை செயல் அலுவலர் ரோகித் ரமேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தங்களுக்கு கிடைக்க வேண்டிய பரிசுத் தொகையை பெற்றுவிட்டதாக, சென்னை சிட்டி எஃப்சி அணி தலைமை செயல் அலுவலர், இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதன்மூலம், மூன்று மாதகாலமாக இழுப்பறியில் இருந்த ரூ.1 கோடி பரிசுத் தொகையை இந்திய கால்பந்து கூட்டமைப்பு, சென்னை சிட்டி எஃப் சி அணிக்கு ஒரு வழியாக வழங்கியுள்ளது.