கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குநர் இரஞ்சித், மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில்தான் எங்களது நிலத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், பெண்களைத் தேவதாசிகளாக மாற்றியதாகவும், அவர் ஒரு அயோக்கியத்தனமான ஆட்சி புரிந்ததாகப் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இரஞ்சித் மீது நடவடிக்கை எடுத்திட சக்தி சேனா இந்து மக்கள் கட்சி சார்பில் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அப்புகார் மனுவில், ராஜராஜ சோழன் குறித்து ஆதாரமில்லாத, பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து இரஞ்சித் மிகவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இது, ஒட்டுமொத்த தமிழர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. தவறான, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் சாதி, மதக் கலவரங்களைத் தூண்டி அதில் ஆதாயம் தேட நினைக்கும் இரஞ்சித்தைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.