திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி (55). இவர் தனியார் வாடகை கார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இன்று காலை 10 மணி அளவில் சவாரி ஏற்றுவதற்காக காவாங்கரையில் இருந்து ஜி.என்.டி. சாலை வழியாக புழல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது புழல் சோதனைச் சாவடி அருகே எதிர்பாராதவிதமாக காரின் உள்ள ரேடியேட்டரிலிருந்து பயங்கர புகை வந்தது. காரை நிறுத்தி இறங்கி பார்ப்பதற்குள் புகையானது தீப்பிழம்பாக மாறி கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் காரின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குள் கார் பாதி எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்குதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.