நாடு தழுவிய அளவில் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொலைத்தொடர்பு, இணையதள வசதியை கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்ற 2019ஆம் ஆண்டு முதல் அதிநவீன 4ஜி சேவை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அறிவித்திருந்தது.
அதன்படி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால் ஓராண்டு ஆகியும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரையில் 4ஜி சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.
இதனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வெகுவாகக் குறைந்து வருவதால் பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து நாடு முழுவதும் இன்று மத்திய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் அலுவலர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சேலம் மண்டல பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசை கண்டித்தும் 4 ஜி சேவையை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த 'பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன்' கூட்டு தலைமையின் சேலம் மண்டல செயலாளர் ராஜன், "கடந்த மூன்று மாதங்களாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மாத ஊதியம் மிகவும் காலதாமதமாக வழங்கப்படுகிறது. இதனால் பெரும் நெருக்கடிகளை நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர்.
எனவே மத்திய அரசு காலதாமதமின்றி சரியான தேதியில் மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும். அதேபோல வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நான்காம் தலைமுறை இணையதள சேவை தொலைத்தொடர்பு சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தாய் தங்கையை அரசு மருத்துவமனையில் சேர்த்த எம்பி சு.வெங்கடேசன்!