தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிகள் விசாரணை நடைமுறை சட்டத்தில் புதிய மாற்றங்கள் வந்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், காவல் துறையினர் நினைத்ததுதான் நீதிமன்றங்களில் நடைபெறும்.
வழக்கறிஞர்கள் தொழில் செய்ய இயலாது, அப்பாவிகளும் தண்டிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே புதிய மாற்றங்கள் தேவையில்லை. பல ஆண்டாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டமே தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்க உள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் பல மாதங்களாக மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வழக்கறிஞர்கள் மட்டும் இன்றி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்குகளை தாக்கல் செய்ய பெட்டிகள் வைக்க வேண்டும். பெரும்பாலான மாவட்டங்களில் இந்த வசதி செய்யப்படவில்லை. பல மாதமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்” என்றார்.