தமிழ் சினிமா உலகம் கதாநாயகர்களின் பிம்பத்தின் பின்னால் இருந்தாலும் அவ்வப்போது சில இயக்குநர்கள் வந்து அந்த பிம்பத்தை உடைத்து தங்களின் பின்னால் சினிமாவை வைத்துப் பாதுகாத்துக் கொள்வார்கள். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என நீளும் அந்த பட்டியலில் பாலுமகேந்திராவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவர் இருந்தபோது தமிழ் சினிமா, கதாநாயகர்களின் பிம்பத்தில் இருந்தாலும் தனது படங்கள் வெளியானபோதெல்லாம் அதனை உடைத்துப் பாதுகாத்தவர் பாலு.
அவர் உச்சத்தில் இருந்தபோதே அப்படி என்றால் 90களிலும், 2000க்குப் பிறகும் தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக கதாநாயகர்களின் வசம் சென்றது. ஆனால் அவற்றை உடைத்து தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் எப்போதும் இயக்குநர்கள்தான் என்று மீண்டும் ஆணித்தரமாக கோலிவுட்டுக்கு உணர்த்தியது எதுவென்றால், பாலுமகேந்திரா பிள்ளைகளின் வரவு, (பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன்).
பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமான இயக்குநர். மகேந்திரன் மௌனத்தை மொழியாக்கிவர் என்றால் அவர் மெளனத்தை மொழியாக்க கற்றுக்கொண்ட கல்லூரியில், பாலுமகேந்திரா சீனியர். அவரது கேமராக்கள் எப்போதும் ஒரு பசுமையை சுமக்கும், இரவுக்குள் ஒளியைக் கடத்தும், ஒளிக்குள் இரவைப் போர்த்தும். அந்த கருப்புக் கண்ணாடிக்கு பின்னால் இருப்பது கண்களா இல்லை கடவுளா என பாலு குறித்து பலர் சந்தேகப்படுவதுண்டு.
'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலில், கார் செல்லும்போது பின்பக்கம் அமர்ந்திருக்கும் ஷோபாவை, பின்னணியில் மரங்களின் இலைகளோடு பாலுமகேந்திரா காட்சிப் படுத்தியிருப்பார். 'ஷோபா ஒரு தேவதை' என்ற கதை ஏற்கெனவே உண்டு. இவரின் கேமரா அதனை உண்மைப்படுத்தியது.
இது இப்படி என்றால், 'ரெட்டை வால் குருவி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'ராஜ ராஜ சோழன் நான்' பாடலில் ஒரு பூங்காவில் படுத்திருக்கும் மோகனிடம் அர்ச்சனா சிரித்துக்கொண்டே பேசுவது போன்று பச்சைப் புல்வெளி பின்னணியில் காட்சிப்படுத்தியிருப்பார். இன்றுவரை பலரின் பேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சர் மெட்டீரியல் அது. இப்படி அவரது கேமராவில் எப்போதும் ஒரு பசுமை இருந்திருக்கிறது. முக்கியமாக மூன்றாம் பிறை திரைப்படத்தில் அவர் வைத்த ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் (Frame) ஒரு தேசிய விருது வழங்கவேண்டும்.
இது ரசிக மனப்பான்மையால் அதீத உணர்ச்சிப் பெருக்கில் வரும் வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும் ஒரு கட்டத்தில் நிச்சயம் அமைதி தேவைப்படும். அப்படி இப்போது யாருக்கு அமைதி வேண்டுமென்றாலும், மூன்றாம் பிறை திரைப்படத்தில் பாலுமகேந்திரா வைத்திருக்கும் ஃப்ரேமை பார்த்தால் போதும். அவ்வளவு பசுமை, அவ்வளவு அமைதி. முன்னர் சொன்னது மாதிரியே அவரின் கேமரா எப்போதும் பசுமையைச் சுமந்திருந்தது.
இதையும் படிங்க: மௌனத்தை மொழியாக்கிய முள்ளின் மலர்; மிஸ் யூ மகேந்திரன் சார்
அவரது கேமரா பச்சையை மட்டுமல்ல, எந்த நிறத்தை பார்த்து இந்த சமூகம் ஒதுங்கியதோ, எந்த நிறம் கொண்டிருந்தால் தாழ்வு மனப்பான்மை தவறாமல் வந்து கொண்டிருந்ததோ அந்த கருமை நிறத்தை அதன் இயல்பிலேயே அழகாகக் காட்டியவர். அவரது நாயகிகளாக திராவிட நிறத்துடையவர்களே இருந்து வந்தனர். அதுகுறித்து பாலுமகேந்திரா இப்படி கூறுகிறார், “நமது திராவிட நிறம் கேமராவில் மிக அழகாக இருக்கும். நமது மூக்கின் மேல் சிறிது எண்ணெய் படிந்திருக்கும் சமாச்சாரத்தின் அழகே தனி”. எந்த ஒரு ஒளிப்பதிவாளரும் மூக்கை அழகாகக் கவனிப்பார். ஆனால், பாலுமகேந்திரா மட்டும்தான் மூக்கின் மேல் படிந்திருக்கும் எண்ணெயை கவனித்து அழகெனக் கூறியவர். அவ்வளவு நுண்ணியப் பார்வை கொண்டவர் அவர்.
பாலுவின் கேமரா இப்படி என்றால் அவரது சினிமாக்கள் அனைத்து வணிக சமாசாரங்களையும் உடைத்தன. இன்றுவரை அவர் எடுத்த 'வீடு' திரைப்படம் அனைத்து நடுத்தர குடும்பத்தினருக்கும் செல்லுலாய்டு தெய்வம். அந்தப் படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனாவின் நடிப்பு என படம் ஒரு புதிய எல்லையைத் தொட்டால் இளையராஜாவின் இசை அடுத்த எல்லைக்கு அந்த படத்தை எடுத்துச் சென்றது. இந்த படத்தில் கட்டப்படுவதாக காட்டப்படும் வீடு செட் இல்லை உண்மையாகவே படத்துக்காகவே கட்டி பாதியில் விடப்பட்ட வீடு. இதிலிருந்து பாலுமகேந்திரா எனும் கலைஞன் சினிமாவை எவ்வளவு வெறித்தனமாக நேசித்திருக்கிறார், நிஜம் இருக்க வேண்டும் என மெனக்கட்டிருக்கிறார் என்பது புரியும்.
அவரது திரைப் பயணத்தில், மூன்றாம் பிறை முக்கியமானது. மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவியைக் கமல் ஹாசன் தாயுமானவனாக மாறி பார்த்துக்கொண்டு கடைசியில் அவரைப் பிரிவார். க்ளைமேக்ஸில் ரயில் நிலையத்தில் கமல் ஹாசன் தன்னந்தனியாக அமர்ந்திருப்பதோடு படத்தை முடித்திருப்பார் பாலு மகேந்திரா. இதுதான் வாழ்க்கை, நீ எவ்வளவு நேசித்தாலும், பாதுகாத்தாலும் அதுவோ, அவரோ உன்னைவிட்டு பிரிந்துவிடுவார்கள் என காட்சியில் ரசிகனுக்கு பாடம் எடுத்திருப்பார். அந்த க்ளைமேக்ஸின் நோக்கம், ரசிகன் கண்ணில் கண்ணீர் வருவதோ, கமலை நினைத்து பரிதாப்படுவதோ அல்ல. மாறாக, இவ்வளவுதான் வாழ்க்கை என மனதை தேற்றிக்கொண்டு கடந்து போக கற்றுக் கொடுத்தல். இன்றுவரை அந்த க்ளைமேக்ஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர். எல்லோரும் நம்மை பிரிந்து போகிறார்களே என்ற கவலை மனநிலையில் அந்த க்ளைமேக்ஸை கண்டால் இதைவிடவா நமது பிரிவு கொடிது என்ற எண்ணம் எழும். அதுதான் அந்த க்ளைமேக்ஸின் வெற்றி.
இந்த உலகம் எப்போதும் தந்தை, தாய் பாசத்தில் கட்டுண்டு இருக்கிறது. முக்கியமாக தமிழ்ச் சமூகம் இந்த மிகப்பெரும் வலையில் சிக்கி இருக்கிறது. மகன் என்பவன் பிறந்ததும் தந்தையின் உழைப்பால் வளரவேண்டும். அவன் வளர்ந்த பிறகு மகனின் பணத்தில் தந்தை வாழ வேண்டும் என்பதே தமிழ்ச் சமூகத்தின் விதி. அப்படித்தான் இன்றுவரை நடந்துகொண்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட நடைமுறை என்பது, தந்தை - மகன் உறவு இல்லை. மாறாக தந்தை மகனுக்கு கடன் கொடுக்கிறார். அதை மகன் வளர்ந்த பிறகு தந்தைக்கு திருப்பிக் கொடுக்கிறான். இது எப்படி எதிர்பார்ப்பற்ற பாசமாகும். அதுமட்டுமின்றி, “நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா இல்லை எனை கேட்டு என் பிள்ளை பிறந்தானா” என கண்ணதாசன் எழுதியது போல், நாம் கேட்டா தாயும், தந்தையும் படைத்தார்கள். பிறகு பெற்றதை சொல்லிக் காண்பிக்கின்றனர் என இச்சமூகத்தில் பேசுபவர்களை மற்றவர்கள் வெறுப்போடு பார்க்கின்றனர்.
ஆனால் அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, தனுஷ் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய, “அது ஒரு கனாக்காலம்” திரைப்படத்தில் தனது தந்தையான டெல்லி கணேஷிடம் மகன் தனுஷ் பேசுவது போன்று ஒரு வசனம் வைத்திருப்பார். அது, “என்ன, பெத்தேன் வளர்த்தேனு பினாத்துறிங்க. பன்னிங்கக்கூடதான் பத்து குட்டி போடுதுங்க. அதுங்க என்ன பெத்தேன் வளர்த்தேனு பினாத்திட்டா இருக்குங்க பெத்தா வளர்க்கனுமுங்க அதான் உங்க கடமை”. இந்த வசனத்தை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. ஏனெனில், தந்தை, தாய் என்ற புனித வலையில் சிக்குண்டு இருக்கும் தமிழ்ச் சமூகத்தில் இப்படி வசனம் வைப்பதென்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. பாலுமகேந்திரா எப்போதும் கலாசாரங்களை சுக்கு நூறாக்கியவர். அதற்கு அவரது 'மறுபடியும்' திரைப்படம் மட்டுமல்ல; அனைத்து திரைப்படங்களும் சாட்சி.
அவரது திரைப்படத்தில் காமம் அதிகமாக இருக்கும் என பலர் கூறுவதுண்டு, காமம்தானே இங்கு பிறப்புக்கான அடிப்படை. அதனை பேசுவதிலோ, காட்சிப்படுத்துவதிலோ என்ன தவறு இருந்துவிட போகிறது. அதுமட்டுமின்றி அவரது திரைப்படத்தில் காமம்தான் இருக்குமேயொழிய வன்புணர்வு இருக்காது. பாலுமகேந்திரா காமத்தைக் காட்சிப்படுத்தியவர், வன்புணர்வை அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பலரின் நுண்ணிய உணர்வுகளை அழகாகக் காட்சிப்படுத்தியவர் பாலுமகேந்திரா. அதற்கு உதாரணம் 'மூன்றாம் பிறை'யில் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரம். இந்த சமூகம் எப்போதும் ஆண்களின் காம உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும். ஆனால் பெண்களின் காம உணர்வுக்கு பட்டம் கொடுக்கும். அதனையும் பாலுமகேந்திரா மூன்றாம் பிறையில் காட்சிப்படுத்தியவர். அதற்குப் பெயர் காமத்தைக் காட்சிப்படுத்துவது இல்லை, உணர்வை வெளிக்காட்டுவது.
நம்மை நாம் உணர்ந்தால்தான் பிறரின் நுண்ணிய உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அப்படிப் பார்க்கையில் பாலுமகேந்திரா முழுதாக தன்னை உணர்ந்து காடு போல் அமைதியாக எந்த சஞ்சலமுமின்றி இருந்தவர்.
அவரது கண்களும், எண்ணங்களும் காடு போன்றது. உள்ளே என்ன இருக்கும் என யாருக்கும் தெரியாது. காடு வழியாகப் பார்த்தால் இந்த பூமி எவ்வளவு அழகாக, ஆழமாக இருக்குமோ அதுபோலத்தான் பாலுமகேந்திராவின் கண்கள் வழியாகவும், எண்ணங்கள் வழியாகவும் பார்க்கும்போது இந்த பூமியும், மனிதர்களும் அழகாகவும், ஆழமாகவும் தெரிந்தார்கள். ஆம், பாலுமகேந்திரா கண்களுக்குள்ளும், எண்ணங்களுக்குள்ளும் காடு வைத்திருந்தவர். மிஸ் யூ பாலுமகேந்திரா சார்...
இதையும் படிங்க: தமிழ்ப் பெரு நிலத்தை காத்த பேரரசன் நா. முத்துக்குமார்