இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றினை அளிக்க வந்திருந்தனர். கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக ஆட்சியரை சந்திக்க இயலாத சூழலில், விவசாய சங்கத்தினர் தாங்கள் கொண்டு வந்த மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், "திருப்பூர் மாவட்டத்தை அடுத்த உடுமலை வட்டத்தில் உள்ள அமராவதி அணையில் தற்போது 41 அடி தண்ணீர் உள்ளது. கடந்த மே மாதம் முதல் பெரிய தாராபுரத்தில் மேற்கே உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று வரை கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்திற்கு அமராவதி நீர் வந்து சேரவில்லை. விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்கு கூட கரூரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
எனவே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் விட வேண்டும். அதற்கு தற்போது உள்ள அணையில் நீரை வெளியேற்றாமல், 60 அடி கொள்ளளவை எட்டும் வரை மூடி வைத்திருக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனுவை அளித்துள்ளோம். அவர்கள் விவசாய சங்கத்தினரின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பார் என நம்புகிறோம்" என்றனர்.