தேனி மாவட்டத்தில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாவட்ட, மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் சுகாதாரம், காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேனி - திண்டுக்கல் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி, காட்ரோடு சோதனைச் சாவடியில் வழக்கம்போல் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்காக பெறப்பட்ட இ-பாஸ் மூலம் பயணித்த கார் ஒன்றை, காவல் துறையினர் சோதனை செய்தனர்.
இதில், அவர்கள் காண்பித்த அனுமதிச்சீட்டு காலாவதியான போலி இ-பாஸ் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, கார் ஓட்டுநர் முருகேசனிடம் விசாரணை நடத்தினர். அதில், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நபர் சொந்த ஊரான தேனிக்குச் செல்ல விண்ணப்பித்திருந்ததாகவும், அதற்கு இ-பாஸ் கொடுத்து கார் ஓட்டுநர் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கார் உரிமையாளரான கோவையைச் சேர்ந்த வெம்மாண்டசாமி என்பவரை தேவதானப்பட்டி வரவழைத்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில், இ - பாஸ் போலியானது என ஒப்புக்கொண்டார்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் கார் உரிமையாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கார் ஓட்டுநர் முருகேசன், பயணம் செய்த சுகுமார் ஆகிய இருவரையும் பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பரபரப்பான சென்னை விமான நிலையத்தில் மயான அமைதி!