நாமக்கல் மாவட்டம் நா.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திர மோகன். விவசாயியான இவர், கடந்த 20 நாள்களுக்கு முன்னர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.
இதில், களைகளை கட்டுப்படுத்த நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள வேல் அக்ரோ என்ற மருந்துக் கடையில் இருந்து களைக்கொல்லி மருந்து வாங்கியுள்ளார்.
இதனை தனது இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த பயிரில் தெளித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு பின்னர் பயிர்கள் அனைத்தும் கருகின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரமோகன், பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கிய தனியார் மருந்துக் கடையின் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், அவர் சரிவர பதில் கூறாததால் மாவட்ட வேளாண்மை துறையினரை சந்திரமோகன் அணுகியபோது, சோளப்பயிருக்கு தெளிக்க வேண்டிய களைக்கொல்லியை மாற்றி நிலக்கடலை பயிருக்கு தெளித்ததால் பயிர்கள் கருகியதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சந்திரமோகன், மருந்தை மாற்றி வழங்கிய தனியார் மருந்துக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.