மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் கட்டுமான பணியில் வேலை செய்துவருகிறார். அவர் தனது மனைவி, நான்கு குழந்தைகளுடன் ராயபுரம் ரயில்வே நிலையம் அருகே தற்காலிக குடியிருப்பில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், தனது நண்பரை சந்திக்க சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
நண்பரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது சென்ட்ரல் பேருந்து நிலையத்தில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பப்லுவிடம், தான் சென்னையில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுவருவதாகவும், தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு கட்டுமான பணியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரை அழைத்துக்கொண்டு பப்லு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, இருவரும் சேர்ந்து ராயபுரம் பகுதியில் மதுபானம் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
தனது வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்க பப்லு வெளியே சென்றுள்ளார். அடையாளம் தெரியாத நபர் பப்லுவின் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாகக் கூறி மூன்று பேரை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது பப்லுவின் மூத்த மகன் எட்டு வயது சிறுவன் தனது தங்கை ஒருவரை அழைத்துக்கொண்டு உணவு வாங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
ஆனால், அடையாளம் தெரியாத அந்த நபர் மூன்று வயது மரிஜூன என்ற பெண் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால், குழப்பமடைந்த பப்லு முதலில் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார். எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாத நிலையில் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும் ராயபுரம் பகுதியில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.