திருச்சி மாவட்டம், தென்னூர் ஆழ்வார்தோப்பு, காயிதேமில்லத் நகரில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து திருச்சி மேற்கு தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையில் அலுவலர்கள் இன்று (ஜூலை 10) அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி 25, 50 கிலோ மூட்டைகளாகக் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 650 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது என தெரிய வந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த வீட்டில் வசித்து வரும் காதர், இவரது மனைவி தாஜி நிஷா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த ரேஷன் கடைகளில் இருந்து இந்த அரிசி வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.