தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொற்று பரவிய முதல்கட்டத்தில் 100க்கும் குறைவான அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது 5ஆயிரத்தை கடந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொற்று பாதிப்பு 4ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் 7 பேர், தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் 55 வயது தலைமைக் காவலர், அல்லிநகரம் காவல் நிலையத்தின் முதல்நிலை காவலர், ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய வீரர் ஒருவர் என இன்று ஒரே நாளில் 329 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 5ஆயிரத்து 355ஆக உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 47வயது பெண் கிளார்க், அல்லிநகரத்தைச் சேர்ந்த 63வயது மூதாட்டி, முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த 80வயது முதியவர், தெப்பம்பட்டியைச் சேர்ந்த 65வயது முதியவர் என 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தற்போது வரை 3ஆயிரத்து 85பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.