இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ‘மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் -2006’’ என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 93-ஆவது திருத்தம் ஆகும்.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகும். அந்த சட்டத்தின்படி மும்பையிலுள்ள ஹோமிபாபா தேசிய நிறுவனம் உள்ளிட்ட 8 உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அத்தகைய சூழலில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த முடியாது என்று கூறும் உரிமை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கிடையாது.
நாடாளுமன்றத்தை விட மருத்துவ கவுன்சில் பெரிய அமைப்பு அல்ல. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து, அசோகா குமார் தாக்கூர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது.
அவ்வாறு இருக்கும் போது மருத்துவ மேற்படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பது தொடர்பாக பல நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பதாக மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் கூறுவது ஏமாற்றும் வேலையாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்க்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்காக மருத்துவக் கவுன்சில் விதிகளையும், பொருந்தாத நீதிமன்றத் தீர்ப்புகளையும் காரணம் காட்டும் மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான பொதுப்பிரிவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு (EWS) எந்த அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குகிறது?
அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் எப்போது அனுமதி அளித்தது? உயர்கல்வி நிறுவனங்களின் பொது இடங்களில் அவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கே இன்னும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்காத நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த சட்டம் வகை செய்கிறது? உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒரு நீதி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இன்னொரு நீதி என்பது சமூக நீதி அல்ல, சமூக அநீதி.
எனவே, இனியும் தாமதிக்காமல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதன்மூலம் இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.