தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 567ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த மூன்று பேர், மைசூரிலிருந்து வந்த ஒருவர், அவருடன் தொடர்பில் இருந்த நான்கு பேர், மற்ற மாவட்டத்தில் இருந்து வந்த மூன்று பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த எட்டு பேர் உள்ளிட்ட 19 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருபுறம் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தாலும், மறுபுறம் நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் 326 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.