திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், கடந்த 16-ஆம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கல்லணை கால்வாய் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்த நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திருவாரூர் மாவட்டம் முழுவதும் 21ஆயிரத்து 550 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேரடி விதைப்பில் 3 ஆயிரத்து 762 ஏக்கரும் திருந்திய நெல் சாகுபடியில் 2 ஆயிரத்து 170 ஏக்கரும், இயந்திர நடவு பணியில் 12 ஆயிரத்து 295 ஏக்கரும் சாதாரண நடவு முறையில் 3 ஆயிரத்து 322 ஏக்கரில் குறுவை சாகுபடி பணி நடக்கிறது. தற்போது வயல்களில் உழவு பணிகள் முடிந்து விதை தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 40 - வேளாண்மை விதை சேமிப்புக் கிடங்கு மூலமாக கோ ஆர்-51 ஆடுதுறை 37, ஆடுதுறை 45, விதை ரகங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 245-டன் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.