திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 503 ஆக இருந்தது. இன்று புதிதாக 17 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த எட்டு பேருக்கும், மும்பை மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வந்த தலா ஒருவருக்கும், பெங்களூரு மற்றும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த தலா இருவர் உள்ளிட்ட 17 பேருக்கும் இன்று கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த 17 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்பட், கிழக்கு ஆரணி, நாவல்பாக்கம், வந்தவாசி, திருவண்ணாமலை நகராட்சி, காட்டாம்பூண்டி, தண்டராம்பட்டு, தச்சூர், நாவல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருபுறம் கரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தாலும், மறுபுறம் நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் 252 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 15 பேர் மட்டுமே கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 40 நாள்களில் மட்டும் 34 மடங்கு அதிகரித்து, 505 பேர் புதிதாக கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுடிருப்பதும், இருவர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.