நாளை முதல் ஊரடங்கு தளர்வின் இரண்டாம் கட்டம் தொடங்கவுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் தனது உரையில் பேசியதாவது, ”பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏழை மக்கள் ஒருவர்கூட பசியுடன் உறங்கக் கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொண்டுவருகின்றனர். 20 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக சுமார் 80 கோடி பேருக்கு நவம்பர் மாத இறுதிவரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். இதன்மூலம் ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ கொண்டைக்கடலை விலையில்லாமல் வழங்கப்படும்.
ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம் விடுபட்ட மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு, அதன்மூலம் இந்தத் திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படும். விவசாயிகள் மற்றும் நேர்மையாக வரி செலுத்துவோரின் காரணமாகவே அரசின் இந்த முயற்சி சாத்தியமாகிறது. அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.
இந்தியா-சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், அதுகுறித்து பிரதமர் மோடி தனது உரையில் ஏதேனும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏதும் பேசவில்லை.
இதையும் படிங்க: சீனச் செயலிகள் தடை: மாற்றுச் செயலிகள் என்னென்ன?