சென்னை: பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார்.
அதிமுக கூட்டணியிலிருந்த பாரதிய ஜனதா இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்த நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இல்லம்தோறும் தாமரை
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்துவரும் கட்சி, தொண்டர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் விதமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள், சற்று நேரத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம். கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் வீடு வீடாகக் கட்சியை எடுத்துச் செல்வதற்கு இது ஒரு வாய்ப்பு.
மேலும் இல்லந்தோறும் தாமரை இருக்க வேண்டும், உள்ளாட்சியில் நல்லாட்சி மலர தொண்டர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் விதமே பாரதிய ஜனதாவின் இம்முடிவு. அதிமுக தலைவர்கள் மீது எந்த ஒரு வருத்தமும் கிடையாது. அவர்கள் பண்பான தலைவர்கள், நல்ல மரியாதையுடன் நடத்தினர்.
இல்லந்தோறும் தாமரையைக் கொண்டுசேர்க்க இந்த முடிவை எடுத்துள்ளோம். நிறைய இடத்தில் நிற்க வேண்டும் என்பது நியாயமான ஆசை, அதிமுகவின் முடிவை ஏற்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கை கூடுமா, சூரியன் சுடுமா? சூடுபிடிக்கும் மலைக்கோட்டை தேர்தல் அரசியல் களம்!