கர்நாடகாவில் பெங்களூருவில் வசிக்கும் ஹிடேஷ் இந்திராணி என்ற பெண், நேற்று (மார்ச்10) மதியம் 3.30 மணியளவில் சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் அதனை கேன்சல் செய்துள்ளார்.
அடுத்த ஒரு சில நிமிடங்களில், டெலிவரி பாய் உணவுடன் அவருக்கு வீட்டிற்கு வந்துள்ளார். ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், நான் உன் வீட்டு அடிமை இல்லை என கத்திய டெலிவரி பாய், பெண்ணின் மூக்கில் பலமாகக் குத்திவிட்டு ஓடியுள்ளார்.
இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மூக்கில் ரத்தம் வந்துகொண்டிருந்த போதே, பிரச்சினையை வீடியோவில் பேசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். வீடியோ வைரலானது, பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. காவல் துறைத் தலைவரும், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் களத்தில் இறங்கினர்.
இந்த விசாரணையில், பெண்ணை தாக்கியது எலக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கும் காமராஜ் என்பது தெரியவந்துள்ளது. இவர் பல ஆண்டுகளாக சோமேட்டோவில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து, காமராஜை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் ஆபாசம்... தனிமையில் அத்துமீறல்: ஆசிரியரைக் காக்கத் துடிக்கும் அலுவலர்கள்!