கர்னூல்: ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூலை சேர்ந்த மல்லேபோகு முரளிகிருஷ்ணா என்பவர் தனது நெருங்கிய நண்பனின் காதலியை அவரது அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டி வந்ததால், கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கர்னூல் நகர போலீசார் கூறுகையில், "கர்னூலில் உள்ள பாலாஜிநகரை சேர்ந்தவர் எருகாலி தினேஷ். இவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் மல்லேபோகு முரளிகிருஷ்ணா (22) பூ விற்பனை கடையில் பணி புரிந்துவந்தார்.
இதில் எருகாலி தினேஷ், அவரது காதலி உடன் தனிமையில் இருந்த வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருந்தார். இந்த வீடியோக்களை பார்த்த முரளிகிருஷ்ணா தனது போனில் அவருக்கு தெரியாமல் டவுன்லோட் செய்து வைத்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோவை தினேஷின் காதலிக்கு அனுப்பி அவரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நேரத்திலேயே தினேஷிடம் முரளிகிருஷ்ணா வீடியோ காட்டி மிரட்டியதை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், முரளிகிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து தனது மற்றொரு நண்பனான கிரண் குமார் என்வருடன் சேர்ந்து, ஜனவரி 25ஆம் தேதி முரளிகிருஷ்ணாவை பேச்சு வார்த்தை நடத்த அழைத்துள்ளார். அப்போது, கிரண் குமார், முரளிகிருஷ்ணாவை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான பஞ்சலிங்கலா பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, காத்திருந்த தினேஷ், கிரண் குமாருடன் சேர்ந்து, முரளிகிருஷ்ணாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து ஆட்டோ மூலம் உடலை எடுத்து சென்று நன்னூறு சுங்கச்சாவடி அருகே உள்ள எச்என்எஸ்எஸ் கால்வாயில் வீசினர். இவரது செல்போன் மற்றும் துணிகளை வெவ்வேறு இடங்களில் வீசினர்.
அதன்பின் முரளிகிருஷ்ணாவின் பெற்றோர் மகனை காணவில்லை என்று பிப்.16ஆம் தேதி கர்னூல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தினேஷிடம் விசாரணை நடத்தியதில் மேற்கூறிய கொலை சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து கிரண் குமாரையும் கைது செய்தோம். முரளிகிருஷ்ணாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "நூறாண்டு காலம் வாழ்க".. மருத்துவமனையில் நடந்த திருமணம்.. நெகிழ்ச்சியில் தொடங்கிய வாழ்க்கை..