தெலங்கானா தலைநகர் ஹைதாபாத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, ஹைதராபாத்தை கைப்பற்றுவதில் பாஜக மிகவும் தீவிரமாகவுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷா, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் பைசாபாத்தை அயோத்தி என்றும் அலகாபாத்தை பிரயாகராஜ் என்றும் பெயரிட்டோம். அதன்படி ஹைதராபாத்தை ஏன் பாக்யநகர் என்று மாற்ற முடியாது?" என்றார்.
யோகி ஆதித்யநாத்தின் இந்தப் பேச்சுக்கு மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான ஓவைசி இன்று பதிலடி அளித்துள்ளார். இன்று பரப்புரையில் பேசிய ஓவைசி, "உங்கள் தலைமுறையே முடிந்தாலும், ஹைதராபாத்தின் பெயர் ஹைதராபாத்தாகவே இருக்கும்.
இந்தத் தேர்தல் ஹைதராபாத்திற்கும் பாக்யநகரும் இடையே நடைபெறும் தேர்தல். ஹைதராபாத் பெயர் மாற்றப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் மஜ்லிஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.
அவர்கள் அனைத்து பெயர்களையும் மாற்ற விரும்புகின்றனர். உங்கள் பெயர்கூட மாற்றப்படலாம், ஆனால் ஹைதராபாத் பெயர் மாற்றப்படாது. உத்தரப் பிரதேச முதலமைச்சர் இங்கு(ஹைதராபாத்) வந்து பெயர் மாற்றப்படும் என்கிறார். இதற்கென்று எவர்கள் ஒப்பந்தம் எதேனும் எடுத்துள்ளனரா?" என்று கடுமையாக சாடி பேசினார்.
150 உறுப்பினர்களைக் கொண்ட பெருநகர ஹைதராபாத் மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 1ஆம் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: தலித்துகளுக்கு கல்வியை மறுக்கும் பாஜக - ராகுல் விமர்சனம்