பெங்களூர்: பெங்களூர் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் வசித்து வருபவர், பிரசாத். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி பயண்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஜன.3) தனது ட்ரவுசரில் போனை வைத்தபடி, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது ஒயிட்ஃபீல்ட் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென தனது ட்ரவுசரில் இருந்த போன் வெடித்துள்ளது. இதில் அவரது வலது கால் தொடையில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, படுகாயம் அடைந்த பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, போன் வெடித்ததில் ஏற்பட்ட பிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், தீ காயத்தை குணப்படுத்தும் அறுவை சிச்சைக்காக சுமார் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்ததாக, காயம் அடைந்த பிரசாத் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் போன் வெடித்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த அந்த செல்போன் நிறுவனம், போனுக்கான தொகையும், மருத்துவச் செலவில் ஒரு பகுதியும் வழங்குவதாக தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: அம்பத்தூர் அருகே சாலையில் 20 அடியில் திடீர் ராட்சத பள்ளம்..! பொதுமக்கள் பீதி
ஆனால், தனக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கான மொத்தச் செலவுகளையும் செல்போன் நிறுவனம் ஏற்க வேண்டும் என படுகாயம் அடைந்த பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, பிரசாத்தின் குடும்பத்தினர் செல்போன் விற்பனை மையத்தை அணுகியபோது, நிறுவனம் தரப்பில் சரிவர பதில் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரசாத்தின் வருமானம்தான் அவரது குடும்பத்தின் பிரதான வருமானமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தைக் குணப்படுத்த 4 லட்சம் வரை செலவு செய்வது இயலாதது என்றும், இதனால் தான் பெரும் பொருளாதாரச் சுமைக்கு தள்ளப்படுவதாக பிரசாத் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த செல்போன் நிறுவனம் தனது மருத்துவச் செலை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் வைகையில், தான் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூர் நகரின் முக்கிய பகுதியில் செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உயர் மின்னழுத்தக் கம்பிகளை மாற்றும் பணியின்போது விபரீதம்; வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு!