பெங்களூரு: சமீப காலங்களில் கன்னட மொழி திரைப்படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் WWE உலக சாம்பியனான தி கிரேட் காளியை கன்னட சினிமாவில் தடம் பதிக்க வைத்து, கன்னட சினிமா சர்வதேச அரங்கில் நுழைய உள்ளது. அதிலும், இந்த திரைப்படம் மல்யுத்தத்தை கருவாக வைத்து உருவாக உள்ளதால், இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு WWE ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அறிமுக இயக்குனர் ராக்கி சோம்லி இயக்கும் இந்த படத்திற்கு “கெண்டாடா செராகு’ (Kendada Seragu) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் கெண்டாடா செரகு என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது. இந்த நாவலின் ஆசிரியரே படத்தின் இயக்குனரான ராக்கி சோம்லிதான். எனவே படத்தின் அடுத்தக்கட்ட நகர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண் மல்யுத்த வீராங்கனையை மையமாக வைத்து உருவாக உள்ள திரைப்படத்தில் நடிப்பதற்குதான் WWE சாம்பியன் தி கிரேட் காளியை இயக்குனர் ராம்கி சோம்லி சந்தித்துள்ளார். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திரைப்படத்தில் நடிப்பதற்கு கிரேட் காளி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனரும், கிரேட் காளியும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கிரேட் காளியை தவிர மாலாஸ்ரீ, பூமி ஷெட்டி, யாஷ் ஷெட்டி, வர்தன் தீர்த்தஹள்ளி, ஹரீஷ் அரசு, பாசு ஹிரேமத், ஷோபிதா, சிந்து லோக்நாத் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதிலும் நடிகை மாலாஸ்ரீ போலீஸ் கமிஷனராகவும், பூமி ஷெட்டி மல்யுத்த வீராங்கனையாகவும் நடிக்கின்றனர்.
மேலும் விபின் வி ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் விரேஷ் காம்பிலி இசை அமைக்கிறார். ஏற்கனவே பிரபல WWE சாம்பியன் ஜான் சீனா பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சமீப காலங்களில் ஹாலிவுட் நடிகர்களின் வரவு இந்திய சினிமாக்களில் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. இதில் தமிழ் சினிமாவும் அடங்கும்.
இதற்கு உதாரணமாக, பிரபல தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் பிரபல பிரிட்டிஷ் நடிகரான டேனியல் கால்டஜிரோன் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதேநேரம் இந்திய திரை நட்சத்திரங்கள் ஹாலிவுட்டிலும் தொடர்ந்து தடம் பதித்து வருவதற்கு, ஆஸ்கர் விருதுகளை வழங்குவதற்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நியமிக்கப்பட்டிருப்பதே சாட்சியாக உள்ளது.
இதையும் படிங்க: Video: பின்னணி பாடகர் பென்னி தயாளை பதம் பார்த்த ட்ரோன் கேமரா!