டெல்லி: வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலை வேண்டியும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் வழியில் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்த விவசாயிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில், சம்யுக்தா கிசான் மொர்ச்சா என்ற அமைப்பின் கீழ் விவசாயிகளின் தலைவர்கள் மாபெரும் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன் எதிரொலியை சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சந்தித்தது. மிஷன் பெங்காள் என விவசாயிகளின் தலைவர்கள் இதை அழைத்தனர்.
தற்போது இதே முறையை பின்பற்றி ‘மிஷன் உத்தரப் பிரதேசம்’ நடைபெறவுள்ளது. மிஷன் உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் இருந்து தொடங்கும் என விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் கூட்டத்தை வெற்றி பெறச் செய்ய 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், சம்யுக்தா கிசான் மொர்ச்சா அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்துள்ளன. செப்டம்பர் 5ஆம் தேதி முசாபர்நகரில் உள்ள ஜிஐசி மைதானத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை நடத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு தங்கள் சக்தியை நிரூபிக்க முடியும் என விவசாயிகள் நம்புகின்றனர். இதற்கான பயணத்தை பல்வேறு மாநில விவசாயிகள் இப்போதிருந்தே தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அம்பேத்கரிய எழுத்தாளர் கெயில் ஓம்வெட் மறைவு