பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சாம்ராஜன்நகர் மாவட்டம் குண்ட்லுப்பேட்டை தாலுகாவில் உள்ள ஹங்லலா கிராமத்தைச் சேர்ந்தவர், கெம்பம்மா. இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் வி.சோமன்னா கலந்து கொண்டார். அப்போது மனு கொடுக்கச் சென்ற கெம்பம்மாவை அமைச்சர் சோமன்னா அறைந்துள்ளார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட பலரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், கொலேகலாவில் பேசிய அமைச்சர் சோமன்னா, “என்னுடைய 45 வருட பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டுள்ளேன். சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் சிறு தவறையும் நான் செய்யவில்லை. அவரை தாக்கி இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஹங்கலாவில் அந்த பெண் மீண்டும் மீண்டும் மேடைக்கு வந்து கொண்டிருந்தார். நான் அவரிடம், ‘எத்தனை முறை வருவீர்கள்?’ என கேட்டேன். மேலும் ‘உன் பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன்’ என கூறினேன். இவ்வாறு சொல்லும்போது எனது கையை நகர்த்தினேன். இதில் எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை.
பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அபிமானமும் உண்டு. எல்லோரையும் அம்மா, அம்மா என்றுதான் அழைப்பேன். அந்த பெண்ணுக்கு பட்டாவும் கொடுத்துள்ளேன். இச்சம்பவத்தில் யாரேனும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார். இதனிடையே அமைச்சர் சோமன்னா பதவி விலக வெண்டும் என்ற வாதங்களும் பலரால் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாஜகவினர் - அமைச்சர் மனோ தங்கராஜ்