டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாகர் பகுதியைச்சேர்ந்த 23 வயதான பெண், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். விபத்து நடந்தபோது இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. அதனால் அந்தப்பெண்ணுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால், அவர் கோமா நிலைக்குச்சென்றுவிட்டார். கண்கள் மட்டுமே திறந்திருந்தன. மற்ற எந்தவித செயல்பாடுகளும் இல்லை.
விபத்து நடந்தபோது அந்தப் பெண் கருவுற்றிருந்ததாகத்தெரிகிறது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதால் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேபோல், அந்தப் பெண்ணின் கணவரும் கருவை கலைக்க விரும்பவில்லை. அதனால், தனது ஓட்டுநர் வேலையை விட்டுவிட்டு, தனது மனைவியையும் குழந்தையும் கவனித்து வந்தார். சுமார் 7 மாதங்கள் ஆன நிலையிலும் அந்தப் பெண் முழுமையாக குணமடையவில்லை.
இந்த நிலையில், கோமா நிலையில் இருந்த அந்தப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தாயால் பால் கொடுக்க முடியாததால் பாட்டில் மூலமாக பால் கொடுக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.