பல்லாபகர்க் (ஹரியானா): ஹரியானா மாநிலம், பல்லாபகர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அஜய். இவர் டேட்டிங் ஆப் மூலம் காஜல் என்ற பெண்ணுடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். பின்னர் டெல்லியில் இருவரும் சந்தித்துள்ளனர். காஜல் சிலரை தனது நண்பர்கள் எனக் கூறியும், 11 பேரை தங்கள் உறவினர்கள் எனக் கூறியும் அஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பெற்றோர் வேறு வேறு இடங்களில் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
பின்னர் சில தினங்களில் காஜல், அஜய்யை காதலிப்பதாக கூறி, திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் திருமணம் செய்துள்ளனர். காஜல், அஜய் வீட்டாரிடம் நன்றாக பழகி வந்துள்ளார். அவர்களும் காஜலிடம் நன்றாகப் பழகி வந்துள்ளனர்.
மோசடி அம்பலம்: இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஜல் துணிக்கடை ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறி அஜய்யிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளார். அஜய்யும் சம்மதம் தெரிவித்துப் பணம் கொடுத்துள்ளார். கடை ஆரம்பித்த 5 நாட்களில் ரூ.1 லட்சம் சம்பாதித்தாகக்கூறி காஜல் பணம் கொண்டு வந்துள்ளார். அஜய்யும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்தநிலையில், அஜய் வேலை தொடர்பாக டெல்லி சென்றுள்ளார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, காஜல் வீடு காலி செய்வது போல் பாத்திரம், உடைகள், பணம் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். அஜய் காஜலை டெல்லியில் இருந்து தொடர்பு கொண்ட நிலையில், அவரது 'ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்' என வந்துள்ளது. அஜய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது எந்தப் பொருட்களும் இல்லை. காஜலும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.45 லட்சம் காணவில்லை. அஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
7 பேரை ஏமாற்றிய மோசடி கும்பல்: இதுதொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காஜல் இதே போன்று 6 நபர்களை திருமணம் செய்து ஏமாற்றிப் பணமோசடி செய்துள்ளது தெரியவந்தது. வேறு வேறு பெயர்களில் பழகி காஜல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
காஜல் கடந்த 2010ஆம் ஆண்டு தனது 19 வயதில் டெல்லியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு பணம், பொருட்களோடு மும்பை தப்பி ஓடியுள்ளார். 2014ஆம் ஆண்டு அஜய் குப்தா என்பவரை காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து ரூ.30 லட்சம் மோசடி செய்து தப்பியுள்ளார். இதுபோன்று நொய்டா, காசியாபாத், குர்கானை சேர்ந்த 6 நபர்களை காஜல் வேறு வேறு பெயர்களில் பழகி ஏமாற்றியுள்ளார். அஜய்யை 7ஆவது நபராக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் மேற்கொண்ட விசாரணையில் காஜலிடம் 9 ஆதார் அட்டைகள், பான் கார்டு, 12 வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
மேலும், காஜல் நண்பர்கள், உறவினர்கள் எனக் கூறிய அறிமுகப்படுத்திய அனைவரும் பொய் என்பதும்; அவர்கள் அனைவரும் ஒரு கும்பலாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. டெல்லி காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு காஜல் உள்பட மோசடி கும்பலைத்தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.97 லட்சம் மோசடி; கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம்