கட்வால் : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திரா சித்தூர்க்கு 50 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்தது. ஜொகுலம்பா கட்வாலா மாவட்டம் அடுத்த ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எரவள்ளி கிராஸ் ரோடு அருகே சென்று கொண்டு இருந்த ஆம்னி பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பேருந்தில் திடீரென தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பயணிகள் அலறி துடித்து உள்ளனர். பேருந்தின் ஜன்னல்களை உடைத்து பயணிகள் வெளியேறி உள்ளனர். இதில் ஜன்னலை உடைத்து வெளியேற முடியாமல் போன பெண் பயணி ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புட் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அதற்குள் பேருந்து தீயில் கருகி எலும்புக் கூடு போல் மாறியது. இந்த கோர விபத்தில் மேலும் 4 பேர் தீக்காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஐதராபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர் ஆம்னி பேருந்தை விபத்துக்குள்ளாக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அடுத்த கட்ட விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். நள்ளிரவில் விபத்துக்குள்ளான பேருந்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : அசாம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில் தேர்தல்! பாஜக அபார வெற்றி!