புதுச்சேரி: வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலபாஸ்கர் என்பவரது மனைவி ஆரோக்கியமேரி (31), கனக செட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 19 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் வேலைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. இவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது சகோதரி சவுரி அம்மாள் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அழுகிய நிலையில் பெண்
ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து ஆரோக்கியமேரி உறவினர்கள் நேற்று (ஆக 22) வில்லியனூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஊசுடு ஏரி அருகே முள் புதரில் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் கணுவாப்பேட்டையை சேர்ந்த ஆரோக்கியமேரி என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் அவரை கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விசாரணை
மேலும் ஆரோக்கியமேரி பணிக்கு செல்லும் போது அவர் அணிந்திருந்த நகைகள், பணங்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆரோக்கியமேரி உடன் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆரோக்கியமேரி உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் வழுதாவூர் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டியிடம், ரூ.18 ஆயிரம் நிவாரண உதவி ஆசைக்காட்டி ரூ.2 லட்சம் நகைகள் அபேஸ்!