டெல்லி: இதுகுறித்து DCP இஷா பாண்டே கூறுகையில், கடந்த வியாழன்கிழமை மாலை 4 மணி அளவில், கர்ஹி பகுதியிலிருந்து சுமார் இரண்டு மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக அமர் காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அமர் காவல் நிலையத்தில் ஐபிசி 328/363 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதனையடுத்து குழந்தையைத் தேடும் பணியில் ஒரு குழு களமிறங்கினர். குழந்தையை கடத்திய அந்தப் பெண் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் குழந்தையின் தாயை சந்தித்து, தாய் மற்றும் குழந்தைப் பராமரிப்புக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தான் ஒரு உறுப்பினராக உள்ளதாக தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, அக்குழந்தையின் வீட்டிற்கு சென்று குழந்தையின் தாயிடம் நல்ல முறையில் பேசி குழந்தையை தன்னுடன் அழைத்துச்சென்று வருவதாக கேட்டுள்ளார். அப்பெண்ணை நம்பிய தாய், குழந்தையைக் கொடுத்து, உறவினர் ஒருவரையும் உடன் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் குழந்தையை கடத்திய பெண் உடன் வந்த உறவினருக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானம் கொடுக்க, அதைக் குடித்த உறவினர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இந்த சமயத்திற்காக காத்திருந்த அந்த பெண் மயங்கி விழுந்த உறவினரை அங்கேயே விட்டுவிட்டு குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சுயநினைவிற்கு திரும்பிய உறவினர் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து, முழு விவரத்தையும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராயத் தொடங்கினர். அதில் கடத்தப்பட்ட பெண்ணின் வாகனத்தை அடிப்படையாக கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் அங்கு யாரும் இல்லை.
இதனையடுத்து பிறந்த குழந்தையை கடத்திய பெண் கோட்லா முபாரக்பூர் ஆர்ய சமாஜ் கோவில் அருகே வர உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த காவல் துறையினர் அந்தக் கைது செய்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
கடத்திய அந்த பெண் ஸ்வேதா(25) என்பதும் கோட்லா முபாரக்பூரில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
மேலும் கடத்தப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், 2022 அக்டோபர் மாதம் தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என்றார். பிறந்த குழந்தையை நரபலி கொடுப்பதன் மூலம் தன் தந்தை உயிருடன் வருவார் என சொன்னார். எனவே சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சென்று, தான் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, குழந்தையின் தாயுடன் பழகி, பிறந்த குழந்தையை நவம்பர் 10ஆம் தேதி கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.
ஏற்கெனவே கடத்திய பெண்ணின் மீது இரண்டு வழக்குகள் உள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’ எனத்தெரிவித்தார்.
மூடநம்பிக்கையால் பிறந்து இரண்டு மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை திட்டம் போட்டு கடத்திச் சென்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி முதல்வர் கைது..!