பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள அமிர்தல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அதே பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது, கோயிலுக்குள் வழிபாடு செய்து கொண்டிருந்த பெண்ணை, கோயில் அறங்காவலரான முனிகிருஷ்ணப்பா என்பவர் கடுமையான விமர்சித்துள்ளார்.
அந்த பெண் கருப்பாக இருப்பதாகவும், பார்த்தால் குளித்துவிட்டு வந்ததுபோல இல்லை என்றும் கூறி இழிவாக பேசியுள்ளார். அந்த பெண் பார்ப்பதற்கு விநோதமாக இருப்பதால், அவரை சாமி கும்பிட அனுமதிக்க முடியாது என்று கூறி தாக்கியுள்ளார்.
கோயிலை விட்டு வெளியேற முடியாது என்று அந்த பெண் வாக்குவாதம் செய்தபோது, அவரது முடியை பிடித்து இழுத்துச் சென்று, கோயிலுக்கு வெளியே தள்ளியதாக தெரிகிறது. கோயிலுக்கு வெளியேயும் அறங்காவலர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். அதேபோல் இதுகுறித்து வெளியே கூறினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் கோயிலில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த அறங்காவலர் தன்னையும், தனது கணவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதால் அச்சமடைந்ததாகவும், அதனால் உடனடியாக புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அறங்காவலர் தரப்பில் இன்று(ஜன.6) எதிர்ப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அந்தப் பெண் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும், அதன் காரணமாகவே அவரை வெளியேற்ற வேண்டியிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக கோயிலில் பெண் தாக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV: பைக்கை அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள்