குருஷேத்திரா: பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றியதையடுத்து ஆம்ஆத்மி இப்போது ஹரியானா மாநிலத்தின் மீது தனது கனவத்தை திருப்பியுள்ளது. ஹரியானாவில் 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆம்ஆத்மியின் அரசியல் அடித்தளத்தை அமைக்கும் பணியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன்படி, இன்று முதல்முதலாக ஹரியானாவில் மாபெரும் பேரணி ஒன்றை ஆம்ஆத்மி நடத்தியுள்ளது.
குருக்ஷேத்திராவில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். பேரணியில் பேசிய அவர், "ஹரியானாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆம்ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும். நாங்கள் டெல்லியிலும், பஞ்சாபிலும் ஊழலை முடிவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோல் ஹரியானாவிலும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக, மத்திய அரசை எதிர்த்து போராடிய ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகளுக்கு நான் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதுள்ள பாஜக அரசு எந்த வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி தராததால், ஹரியானா முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்தால், டெல்லியைப் போல ஹரியானாவிலும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழி செய்வோம், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவோம்.
டெல்லியில் அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தியதைப் போலவே, ஹரியானாவிலும் மேம்படுத்துவோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மதத்தை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!