நாட்டின் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்பான பல்வேறு பொதுநல வழக்குகள் டெல்லி, மும்பை, அலகாபாத், கொல்கத்தா, போபால், சிக்கிம் ஆகிய உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், கோவிட்-19 தொடர்பான முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், "மேற்கண்ட உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் கண்டறிந்த சில முக்கியமான பிரச்னைகளை விசாரிக்க முடிவெடுத்துள்ளோம்.
உயர் நீதிமன்றங்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்டு செயல்பட்டாலும், அதில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்து விநியோகம், தடுப்பூசி முறை ஆகியவை தொடர்பாக தேசிய அளவிலான திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை ஆவண செய்ய உள்ளோம்" என்றனர்.
மேலும், லாக்டவுன் தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் எனவும், நீதிமன்றங்களுக்கு அதற்கான அதிகார வரம்புகள் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.