முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே ஹெலிக்காப்படர் விபத்தில் சிக்கி இன்று மரணமடைந்தார். முப்படை தலைமை தளபதியின் எதிர்பாராத மறைவை அடுத்து புதிய தலைமை தளபதி யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ராணுவம், கப்பல் படை, விமானப் படை என முப்படைகளை ஒருங்கிணைக்கும் விதமாக 'Chief of Defence Staff' என்ற முப்படை தலைமை தளபதி என்ற புதிய பதவியை மத்திய அரசு 2019ஆம் ஆண்டு உருவாக்கியது.
அன்றைய ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இந்த புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த புதிய பொறுப்பின் பதவிக்காலம் மூன்றாண்டுகள். பிபின் ராவத்தின் அகால மரணத்தை அடுத்து 13 லட்சம் பாதுகாப்பு வீரர்களை தலைமை ஏற்று நடத்தப்போகும் புதிய நபர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.
தற்போதைய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனேவுக்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக முகுந்த் நரவனே பொறுப்பேற்றார். சீனியாரிட்டி அடைப்படையில் இவருக்குத்தான் முப்படை தலைமை தளபதி பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய விமானப்படை தளபதி விவேக் ராம் சௌத்ரி பதவிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகிறது. இந்திய கப்பல் படையின் தளபதியாக ஹரி குமார் பதவியேற்று வெறும் எட்டு நாள்களே ஆகிறது. எனவே, அனுபவத்தின் அடிப்படையில் நரவனே புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.
நரவனே தலைமை தளபதியாக நியமிக்கப்படும்பட்சத்தில், ராணுவ தளபதியாக யோகேஷ் குமார் ஜோஷி அல்லது சந்தி பிரசாத் மோகந்தி ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது என்ன?