உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தப்பாடில்லை. கரோனா பரவலை தடுத்திட தடுப்பூசி விநியோகிக்கும் பணியில், பல்வேறு நாடுகள் மும்முரமாக களமிறங்கியுள்ளன.
அந்த வகையில், இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருந்து, பல்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இலங்கை, வங்கதேசம், நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் பல நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை சப்ளை செய்துவரும் இந்தியாவையும், பிரதமர் மோடியும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் பாராட்டியுள்ளார்.
![COVAX](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10793460_m.jpg)
இதுகுறித்து அவரது ட்வீட்டில், "கரோனா தடுப்பூசிகளை வழங்கிவரும் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. கோவாக்சின் தடுப்பூசிகளை 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி, சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தது பாராட்டுக்குரியது. உங்களின் செயலை உதாரணமாக எடுத்து அனைத்து நாடுகளும் பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், " நன்றி டெட்ராஸ். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். உலகளாவிய நன்மைக்காக வளங்கள், அனுபவங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா உறுதியாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகரிப்பு- கண்ணை மூடிக்கொண்ட அரசாங்கம்!