வாஷிங்டன் : நிலவு மற்றும் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ள அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா இணைய உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று 5 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்று உள்ளார். வாஷிங்டனில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனுடன் இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நிலவு மற்றும் விண்வெளி குறித்த அமெரிக்காவின் ஆராய்ச்சியில் இந்தியா இணைய திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2024ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது, நிலவு மற்றும் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் ஒன்றிணைந்த திட்டமாக ஆர்ட்டெமிஸ் ஒப்பந்ததை அமெரிக்க கையில் எடுத்து உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் நிலவுக்கு எதிர்கால பயணங்களை வழிநடத்த ஒரு ஒற்றை உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் திட்டத்தில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ரோபோ மற்றும் மனிதர்கள் குழு நிலவு குறித்த ஆய்வுக்கு வழிகாட்ட அடிப்படைக் கொள்கைகளை அமைப்பதற்காக நாசா மற்ற நாடுகளுடன் இணைந்து ஆர்ட்டெமிஸ் ஒப்பந்ததை உருவாக்கி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், இத்தாலி, லக்சம்பர்க், ஐக்கிய ஆர்பு அமீரகம், ஈகுவடார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாசாவின் நிலவுக்கான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை குறிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் விண்வெளி வீரர்களை 2024ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நிலவு குறித்த ஆய்வு, பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, விண்வெளி வளங்களின் நிலையான பயன்பாடு, விண்கலம் மற்றும் பிற உபகரணங்களை உருவாக்க மற்றும் செயல்படுத்த ஒத்துழைப்பு, விண்வெளி சுற்றுப்பாதை குப்பைகளை நிர்வகித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்திட்டத்தில் இந்தியாவும் தற்போது இணைய திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாசாவுடன் சேர்ந்து 2024ஆம் ஆண்டு விண்வெளி மற்றும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 2024ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான கூட்டு பணிக்குழு திட்டத்தில் நாசாவும், இஸ்ரோவும் ஒன்றிணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இந்திய விமானப் படைக்கு ஃபைட்டர் ஜெட் என்ஜின்... அமெரிக்க நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!