பெங்களூரு : காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திர எடியூரப்பாவும் ஷிகாரிபுரா தொகுதியில் வெற்றி பெற்றார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இன்று (மே. 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ ஆட்சி அமைப்பது உறுதியானதாக கருதப்படுகிறது.
மாலை 4 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் வெற்றியும், 62 இடங்களில் முன்னிலையும் பெற்று உள்ளன. அதேபோல் பாஜகவும் 34 இடங்களிலும் வெற்றி பெற்றும் 30 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆட்சியை நிர்ணயிக்கும் கிங் மேக்கர் எனக் கூறி, முதலமைச்சர் பதவிக்கு அடிபோடும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு இந்த முறை எந்த கட்சிக்கும் தேவையில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியில் அங்கம் வகித்த 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த முறை தோல்வியின் கோரப் பிடியில் சிக்கி திண்டாடி வருகின்றனர்.
அதேபோல் வாரிசு அரசியலை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோரும் இந்த தேர்தலை எதிர்கொண்டனர்.
இதில் ராமநகரா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி படுதோல்வியைத் தழுவினார். நிகில் குமாரசாமி 76 ஆயிரத்து 975 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் ஹூசைன் 87 ஆயிரத்து 690 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார். 81 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்று விஜயேந்திர எடியூரப்பா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோனி மல்லாடேஷ் வெறும் 8 ஆயிரத்து 101 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.
அதேநேரம் ஷிகாரிபிரா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.பி.நாகராஜ கவுடா 70 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தபூர் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஏறத்தாழ 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றார்.
பிரியங்க் கார்கேவை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனிகண்ட ரதோர் 67 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றினார். காங்கிரஸ் அமைச்சரவையில் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 1999ஆம் ஆண்டுக்குப்பிறகு, அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் வரலாறு திரும்புகிறது! 1999-க்கு பிறகு காங்கிரசின் மகத்தான வெற்றி!