இளவரசர் பிலிப்-ராணி இரண்டாம் எலிசபெத் இருவரும் இந்தியாவிற்கு முதன்முதலாக 1961ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டனர். அப்போது, பம்பாய் (மும்பை), மெட்ராஸ் (சென்னை), ஜெய்ப்பூர், ஆக்ரா, இறுதியாக கல்கத்தா (கொல்கத்தா) ஆகிய நகரங்களுக்கு சென்றனர்.
குறிப்பாக, சிட்டி ஆஃப் ஜாய் என்றழைக்கப்படும் கொல்கத்தா சென்றபோது, மக்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது. பிரிட்டன் ராஜகுடும்பத்தின் தம்பதியினரை பார்க்க கொல்கத்தாவின் சாலைகளில் 20 லட்சம் பேர் திரண்டதாக தேசிய, சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சமயம் புகழ்பெற்ற விக்டோரியா நினைவிடத்திற்குச் சென்ற தம்பதியினர், நகரின் முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து விக்டோரியா நினைவிடத்தின் இயக்குநர் ஜெயந்தா சென்குப்தா கூறுகையில், "பிரிட்டன் ராஜகுடும்ப தம்பதியினரின் அதிகாரப்பூர்வ பயணம் அது. எனவே, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இப்போதும் நினைவிடத்தில் வைத்து பராமரித்து வருகிறோம்" என்றார்.
பிலிப்-இரண்டாம் எலிசபெத் ஆகியோர் விக்டோரியா நினைவிடத்திலிருந்து ராயல் கொல்கத்தா டர்ஃப் கிளப்புக்கு சென்றதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்பதியினருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள், அவர்களை அருகில் நின்று பார்த்தது சிறப்பான தருணம் எனவும் நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பக்கிங்காம் அரண்மனை குறித்த பல சுவாரஸ்யத் தகவல்கள் அப்போது வெளிவந்து கொண்டிருந்தது.
அப்பயணத்தில் மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு என்னவென்றால், புலியை எப்படி வேட்டையாடுவது என்பது குறித்து ராஜகுடும்பத்தின் தம்பதியனருக்கு ஜெயப்பூர் மகாராஜா கற்று கொடுத்தார். 1961ஆம் ஆண்டை தொடர்ந்து, 1983, 1997 ஆகிய ஆண்டுகளில் பிலிப் - இரண்டாம் எலிசபெத் இருவரும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். குறிப்பாக, 1997ஆம் ஆண்டு, 50ஆவது சுதந்திர தின விழாவில் இருவரும் கலந்து கொண்டனர்.