சென்னை: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் பன்னாலால் தம்பதி நேற்று அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் 12 தமிழக போலீசார் தங்களை மிரட்டி கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றால் இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் நேற்று 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற போது 12 தமிழ்நாடு போலீசாரை கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்ததாகத் தகவல் வெளியானது.
இதனையடுத்து பிடிப்பட்ட 12 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தமிழக போலீசார் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநில கும்பல் ஒன்று ரயில் மூலமாகத் திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டத்திற்கு வந்து பலூன் விற்பது போலவும், பிச்சை எடுப்பது போன்றும் வீட்டை நோட்டமிட்டு உடைத்து நகை, பணத்தைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மேலும் ஒருவர் மாயம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஈஷா மையம்!
மேலும், ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்த நகை, பணத்தைச் சொந்த மாநிலமான ராஜஸ்தானிற்கு எடுத்துச் சென்று மறைத்து வைப்பதாகவும், 500 சவரனுக்கும் மேற்பட்ட கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் கும்பலைச் சேர்ந்த ரத்தன், சங்கர், ராம் பிரசாத், ராமா ஆகிய 4 பேரைத் தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இக்கொள்ளை வழக்கில் நகை, பணத்தை மறைத்து வைத்துத் தலைமறைவாக இருந்து வரும் சோனியா மற்றும் அவரது கணவர் பன்னாலால் ஆகியோரை பிடிப்பதற்காக ஆய்வாளர் ஷியமளா தேவி தலைமையிலான 12 பேர் கொண்ட திருச்சி தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்திற்குச் சென்று, அங்குச் சோனியா மற்றும் பன்னாலால் ஆகியோரை கைது செய்துவிட்டு, அவர்களிடம் நகைகளை மீட்பதற்காக விசாரணை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த தம்பதி கைது செய்யாமலிருக்க 25 லட்சம் லஞ்சம் கேட்பதாகப் பொய்யாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமிழக போலீசார் திருட்டு வழக்கில் நகைகளை மீட்க வந்துள்ளதாக கூறுவதால், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழக்கு குறித்தான ஆவணங்களை அம்மாவட்ட போலீசார் கேட்டு பெற்று விசாரணை நடத்தினர்.
தமிழ்நாடு காவல்துறை வழங்கிய ஆவணங்களை சரிபார்த்த பிறகு, போலீசார் மீது பொய்ப் புகார் கூறப்பட்டதை உணர்ந்த ராஜஸ்தான் போலீசார், 12 பேரையும் விடுவித்தனர். மேலும், திருட்டு கும்பலிடம் இருந்து நகைகளை மீட்க ராஜஸ்தான் காவல்துறை உதவி செய்யும் எனவும் அம்மாநில காவல்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி முதலே காதல்; இளம்பெண்ணுடன் உல்லாசம்.. சென்னை இளைஞர் நாடகமா? - போலீசார் விசாரணை